‘தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்ப மிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

– மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

Tuesday, October 29, 2019

வீ வாண்ட் கனவுக் கன்னி!  SURENDRANATH G R

2006-ல் வெளியான 'ரெண்டு’ படத்தில் நடிகை அனுஷ்கா தமிழில் அறிமுகமானார். அப்படத்தில் அனுஷ்கா மாதவனிடம், “நான் இப்ப உங்க கன்னத்துல ஊதுறேன். நான் உங்க மனசுல இருந்தன்னா, உங்க கன்னத்துல குழி விழும்” என்று கூறி ஊதினார். அப்போது என்னைத் தவிர தியேட்டரிலிருந்த அத்தனை ஆண்களின் கன்னத்திலும் குழி விழுந்திருக்கக்கூடும். எனக்கும் குழி விழுந்திருக்கும். ஆனால் என் மனைவி அருகில் இருந்தார். திரையில் அழகான கதாநாயகிகள் தோன்றும்போதெல்லாம், என் மனைவி படத்தை விட்டுவிட்டு, என் முகத்தின் ரியாக்‌ஷனையே கவனித்துக்கொண்டிருப்பார். எனவே அப்போதெல்லாம் நான் தென்னை மரம், மின் கம்பம் ஆகியவற்றைப் பார்ப்பது போல் எவ்வித சலனமுமின்றி திரையைப் பார்த்துக்கொண்டிருப்பேன். ‘ரெண்டு’ படம் பார்த்தபோதும், என் மனைவி, “அனுஷ்கா சூப்பரா இல்ல?” என்று நைஸாக ஆழம் பார்த்தார். இதற்கு நான், “இந்த பாப்பா பேரு அனுஷ்காவா?இந்த காலத்துப் பொண்ணுங்க எல்லாம் என்னாத்த நல்லாருக்கு….” என்று 75 வயது கிழவன் போல் அப்பாவியாக கூறிவிட்டேன்.அந்தப் படத்தில் கடைசியில் அனுஷ்காவை, கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் கொன்றதற்காக, இயக்குனர் சுந்தர்.சியை இன்று வரையிலும் நான் மன்னிக்கவே இல்லை.