‘தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்ப மிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

– மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

Thursday, July 19, 2012

"அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?"





நியாயமான ஒரு கேள்வி                                                        


"ஏம்பா  இந்த  கம்ப்யூட்டர்  படிச்சவங்க  எல்லாம்  நிறைய  சம்பளம்
வாங்கிட்டு,  பந்தா  பண்ணிட்டு  ஒரு  தினுசாவே  அலையுறீங்களே?  அப்படி என்னதான்  வேலை  பார்ப்பீங்க ?" –

நியாயமான  ஒரு  கேள்வியை  கேட்டார்  எனது  அப்பா.

நானும்  விவரிக்க  ஆரம்பிதேன்.

"வெள்ளைகாரனுக்கு  எல்லா  வேலையும்  சீக்கிரமா முடியனும்.
அதே  மாதிரி  எல்லா  வேலையும்  அவனோட வீட்டுல
இருந்தே  செய்யணும். இதுக்காக  எவ்வளவு  பணம்  வேணுமானாலும்  செலவு செய்ய தயாரா  இருக்கான்."

"அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".
 




"இந்த  மாதிரி  அமெரிக்கால்-ல,  இங்கிலாந்து-ல  இருக்குற Bank,
இல்ல எதாவது  கம்பெனி,  "நான்  செலவு  செய்ய  தயாரா இருக்கேன்.
எனக்கு இத  செய்து கொடுங்க  கேப்பாங்க.
இவங்கள  நாங்க  "Client"னு  சொல்லுவோம்.

"சரி"

இந்த  மாதிரி Client-அ  மோப்பம்  பிடிக்குறதுக்காகவே  எங்க
பங்காளிக  கொஞ்ச  பேர  அந்த  அந்த  ஊருல  உக்கார  வச்சி இருப்போம்.  இவங்க பேரு "Sales  Consultants, Pre-Sales Consultants....".

இவங்க போய் Client  கிட்ட பேச்சுவார்த்தை  நடத்துவாங்க.

காசு  கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்?

ஆயிரத்தெட்டு  கேள்வி கேப்பான். உங்களால  இத பண்ண  முடியுமா?

அத பண்ண முடியுமான்னு  அவங்க கேக்குற  எல்லாம்  கேள்விக்கும்,  "முடியும்"னு பதில்  சொல்றது  இவங்க வேலை.

"இவங்க  எல்லாம்  என்னப்பா  படிச்சுருபாங்க"?

"MBA, MSனு  பெரிய  பெரிய  படிபெல்லாம் படிச்சி  இருப்பாங்க."

"முடியும்னு ஒரே  வார்த்தைய திரும்ப  திரும்ப  சொல்றதுக்கு
எதுக்கு MBA  படிக்கணும்?" –

அப்பாவின் கேள்வியில்  நியாயம்  இருந்தது.

"சரி  இவங்க  போய்  பேசின  உடனே client project  கொடுத்துடுவானா?"

"அது எப்படி?  இந்த  மாதிரி  பங்காளிக  எல்லா கம்பெனிளையும்
இருப்பாங்க. 500  நாள்ல முடிக்க  வேண்டிய வேலைய 60  நாள்ள
முடிச்சு தரோம், 50  நாள்ல  முடிச்சு  தரோம்னு பேரம்  பேசுவாங்க.
இதுல யாரு  குறைஞ்ச  நாள  சொல்றாங்களோ  அவங்களுக்கு
ப்ராஜெக்ட் கிடைக்கும்"

"500  நாள்ல  முடிக்க வேண்டிய  வேலைய 50
நாள்ல எப்படி முடிக்க  முடியும்?  ராத்திரி பகலா வேலை பார்த்தாலும்
முடிக்க  முடியாதே?"

"இங்க தான்  நம்ம  புத்திசாலித்தனத்த நீங்க
புரிஞ்சிக்கணும். 50  நாள்னு சொன்ன  உடனே client  சரின்னு சொல்லிடுவான்.

ஆனா அந்த 50  நாள்ல  அவனுக்கு  என்ன வேணும்னு அவனுக்கும்
தெரியாது,  என்ன  செய்யனும்னு நமக்கும்  தெரியாது.
இருந்தாலும் 50 நாள்  முடிஞ்ச பிறகு  ப்ரோஜெக்ட்னு  ஒன்ன  நாங்க deliver  பண்ணுவோம்.
அத பாத்துட்டு "ஐய்யோ நாங்க  கேட்டது  இதுல்ல,
எங்களுக்கு இது  வேணும்,  அது  வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான்.

"அப்புறம்?" -  அப்பா  ஆர்வமானார்.

"இப்போ தான் நாங்க  நம்பியார்  மாதிரி  கைய  பிசஞ்சிகிட்டே
"இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம்.

"CR-னா?"

"Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த  பணத்துக்கு  நாங்க
வேலை பார்த்துட்டோம்.
இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு
சொல்லுவோம்.
இப்படியே 50  நாள்  வேலைய 500  நாள்  ஆக்கிடுவோம்."

அப்பாவின் முகத்தில்  லேசான பயம்  தெரிந்தது.

"இதுக்கு அவன்  ஒத்துபானா?"

"ஒத்துகிட்டு தான் ஆகணும்.

முடி வெட்ட போய்ட்டு,  பாதி  வெட்டிட்டு வர  முடியுமா?"

"சரி ப்ராஜெக்ட் உங்க  கைல வந்த உடனே என்ன  பண்ணுவீங்க?"

"முதல்ல ஒரு டீம்  உருவாக்குவோம்.
இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு.
இவரது தான் பெரிய  தலை.
ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான்  பொறுப்பு."

"அப்போ இவருக்கு  நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம்
தெரியும்னு சொல்லு."

"அதான்  கிடையாது.

இவருக்கு நாங்க பண்ற  எதுவும்யே  தெரியாது."

"அப்போ இவருக்கு என்னதான் வேலை?" –

அப்பா  குழம்பினார்.

"நாங்க  என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து  கைய  நீட்டுவோம். எப்போ எவன்  குழி பறிப்பானு  டென்ஷன் ஆகி  டயர்ட் ஆகி டென்ஷன்
ஆகுறது தான் இவரு வேலை."

"பாவம்பா"

"ஆனா  இவரு ரொம்ப  நல்லவரு.
எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும்  இவரு  கிட்ட  போய் சொல்லலாம்."

"எல்லா பிரச்னையும்  தீர்த்து  வச்சிடுவார?"

"ஒரு  பிரச்சனைய  கூட  தீர்க்க மாட்டாரு.
நாங்க என்ன சொன்னாலும்  தலையாட்டிகிட்டே  உன்னோட பிரச்னை
எனக்கு  புரியுதுனு சொல்றது மட்டும்  தான் இவரோட  வேலை."

"நான் உன்னோட  அம்மா  கிட்ட  பண்றத மாதிரி?!"

"இவருக்கு கீழ டெக் லீட்,  மோடுல் லீட்,  டெவலப்பர், டெஸ்டர்னு
நிறைய அடி  பொடிங்க இருப்பாங்க."

"இத்தனை பேரு இருந்து,  எல்லாரும் ஒழுங்கா  வேலை செஞ்சா
வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?"

"வேலை செஞ்சா  தானே?
நான் கடைசியா சொன்னேன் பாருங்க...
டெவலப்பர், டெஸ்டர்னு,  அவங்க மட்டும் தான்  எல்லா  வேலையும் செய்வாங்க.  அதுலையும் இந்த  டெவலப்பர்,வேலைக்கு  சேரும் போதே  "இந்த  குடும்பத்தோட  மானம்,  மரியாதை உன்கிட்ட தான்  இருக்குனு"
சொல்லி, நெத்தில திருநீறு  பூசி அனுப்பி வச்ச  என்னைய மாதிரி
தமிழ்  பசங்க  தான் அதிகம்  இருப்பாங்க."

"அந்த டெஸ்டர்னு எதோ  சொன்னியே?
அவங்களுக்கு என்னப்பா  வேலை?"

"இந்த டெவலப்பர்  பண்ற வேலைல  குறை  கண்டு  பிடிக்கறது
இவனோட வேலை.

புடிக்காத  மருமக  கை பட்டா  குத்தம்,
கால்  பட்டா  குத்தம்  இங்குறது  மாதிரி."

"ஒருத்தன் பண்ற  வேலைல  குறை  கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா?
புதுசா தான் இருக்கு. சரி  இவங்களாவது வேலை செய்யுராங்களா.
சொன்ன தேதிக்கு  வேலைய  முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?"

"அது  எப்படி..?  சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா,
அந்தக் குற்ற உணர்ச்சி  எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு
இருக்கும். நிறைய பேரு  அந்த  அவமானத்துக்கு  பதிலா  தற்கொலை
செய்துக்கலாம்னு சொல்லுவாங்க"

"கிளையன்ட் சும்மாவா விடுவான்?

ஏன் லேட்னு  கேள்வி  கேக்க  மாட்டான்?"

"கேக்கத்தான் செய்வான்.  இது  வரைக்கும் டிமுக்குள்ளையே
காலை வாரி  விட்டுக்கிட்டு இருந்த நாங்க  எல்லாரும்  சேர்ந்து அவன் காலை  வார  ஆரம்பிப்போம்."

"எப்படி?"

"நீ  கொடுத்த  கம்ப்யூட்டர்-ல ஒரே  தூசியா  இருந்துச்சு.
அன்னைக்கு டீம்  மீட்டிங்ல வச்சி  நீ  இருமின,
உன்னோட ஹேர்  ஸ்டைல் எனக்கு  புடிகலை."
இப்படி எதாவது  சொல்லி அவன  குழப்புவோம்.
அவனும் சரி  சனியன  எடுத்து  தோள்ல  போட்டாச்சு,
இன்னும் கொஞ்ச நாள்  தூங்கிட்டு  போகட்டும்னு  விட்டுருவான்".

"சரி  முன்ன  பின்ன ஆனாலும்  முடிச்சி  கொடுத்துட்டு கைய
கழுவிட்டு  வந்துடுவீங்க அப்படித்தான?"

"அப்படி பண்ணினா,  நம்ம  நாட்டுல பாதி  பேரு  வேலை இல்லாம
தான்  இருக்கணும்."

"அப்புறம்?"

"ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ  பயங்கரமான
ஒன்ன பண்ணி இருக்குறமாதிரியும்,  அவனால  அத  புரிஞ்சிக்க
கூட  முடியாதுங்கற  மாதிரியும் நடிக்க  ஆரம்பிப்போம்."

"அப்புறம்?"

"அவனே பயந்து  போய்,
"எங்கள தனியா  விட்டுடாதீங்க.  உங்க  டீம்-ல  ஒரு ஒன்னு,  ரெண்டு
பேர  உங்க  ப்ரொஜெக்ட பார்த்துக்க  சொல்லுங்கன்னு"

புது பொண்ணு  மாதிரி  புலம்ப  ஆரம்பிச்சிடுவாங்க."
இதுக்கு பேரு "Maintenance and  Support".
இந்த வேலை  வருஷ கணக்கா  போகும்.
"ப்ராஜக்ட் அப்படிங்கறது  ஒரு  பொண்ண  கல்யாணம்  பண்ணி  வீட்டுக்கு
கூட்டிட்டு  வர்றது  மாதிரி.

தாலி கட்டினா மட்டும்  போதாது,  வருஷ  கணக்கா  நிறைய  செலவு  செஞ்சு பராமரிக்க வேண்டிய  விசயம்னு..."  இப்போ  தான்  கிளைன்டுக்கு
புரிய ஆரம்பிக்கும்.

"எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுச்சிப்பா".
-- 
Regards
நாநா (NaNa)

Tuesday, July 17, 2012

புத்தங்களே என் உயிர்!

மரியாதைக்குரிய ஐயா ரோஜா முத்தையா அவர்கள் இப்போது நம்மிடையே இல்லை. இவர் சேகரித்து பாதுகாத்த பொக்கிஷங்கள் இப்போது "ரோஜா முத்தையா ஆய்வு நூலகம்" என்று இவரது பெயரிலேயே பாதுகாக்கப் பட்டு வருகின்றன.

இவர் இயற்கை எய்திய போது விட்டுச்சென்ற புத்தகங்கள் ஒன்றரை லட்சத்திற்கும் மேல். இவர் செய்த அந்த உயரிய பணியை தொடர்ந்து செவ்வனே செய்து வருகின்றனர் நூலக நிர்வாகிகள். தலைமை ஏற்று நடத்துகிறவர் திருவாளர் சுந்தர் அவர்கள். அவருக்கு துணையாக துடிப்பான இளைஞர் சுப்பு. 

நூலகம் டைடல் பார்கிலிருந்து தொரைப்பாக்கம் செல்லும் சாலையில் மகளிர் பாலிடெக்னிக் அருகே பழைய தடையவியல் ஆய்வுக்கூடம் இருந்த கட்டடத்தில் இருக்கிறது.

லாப நோக்கமின்றி ஒரு தவம்போல் மக்களுக்கு சேவை புரிந்து வருகின்றனர். லட்சக்கணக்கான புத்தகங்கள், டிஜிடைசேஷன் எனப்படும் தொழில்நுட்பத்தால் கணிணியில் சேமிக்கும் பிரிவு, படங்களைப் பாதுகாக்கும் மைக்ரோ ஃபில்மிங் பிரிவு, மொழி ஆராய்ச்சி மையமான "இன்டஸ் ரிசர்ச் சென்டர்" என இந்நூலகத்தின் பிரிவுகள் ஏராளம்.

தேவார விளக்க வகுப்புகள், சங்க நூல் விளக்க வகுப்புகள் என பல்வேறு வகையில் தொண்டாற்றி வருகின்றனர்.

கார்ப்பரேட் துறையைச் சேர்ந்த என்னால் ஓரளவிற்கு மேல் இவர்களது பணியை உலகிற்கு உரைக்க இயலவில்லை. பதிவுதளத்தில் விவரங்கள் இட்டேன். விகடன் தலையிட்டு இவர்களது பணியை ஊருக்கு எடுத்துரைத்தால் கருத்தொற்றுமை உள்ள மக்கள் இதன் மூலம் ஒன்றிணைந்து ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்திற்கு தங்களாலான சப்போர்ட்டை தர இயலும்.

இதனை ஒரு விண்ணப்பமாக வைக்கிறேன். 

Sunday, July 15, 2012

கொஞ்சம் காபி குடிக்கலாமா?




கி.கார்த்திகேயன்




The Habit Of Winning    -   பளிச் என உள்ளடக்கத்தைச் சொல்லிவிடும் தலைப்பு. பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்த இந்தப் புத்த கத்தின் ஆசிரியர் பிரகாஷ், பிரபலங்களின் வாழ்க்கையில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களைப் பளிச் எனப் புரியவைக்கிறார்.
 பெனால்ட்டி கிக்!
கால்பந்துப் போட்டிகளின்  பெனால்ட்டி  கிக் பார்த்து இருக்கிறீர்களா? கோல் கம்பத்தில் இருந்து 11 மீட்டர் தூரத்தில் பந்தை வைத்து உதைக்கச் செய்வார்கள். அந்தப் பந்து கோல் வலைக்குள் செல்லாமல் கோல் கீப்பர் தடுக்க வேண்டும். அப்போது அந்த கோல் கீப்பர் எதிர்கொள்ளும் சூழ்நிலையை நமது வாழ்க்கையிலும் அடிக்கடி எதிர்கொள்வோம்... எப்படி?
அணியில் யாரோ ஒருவர் செய்த தவறுக்கு கோல் கீப்பருக்கு விதிக்கப்படும் தண்டனையே பெனால்ட்டி கிக். 11 அடி தூரத் தில் இருந்து பந்து உதைக்கப்பட்டதும் 0.1 நொடி மட்டுமே யோசிக்கவும் செயல் படவும் கோல் கீப்பருக்கு அவகாசம் கிடைக்கும். அந்த மைக்ரோ நொடிக்குள் பந்து இடமா...வலமா, மேலா... கீழா எந்தப் பக்கம் பாயும் என்பதைத் தீர்மானித்து அந்தத் திசையில் பாய்ந்து பந்தைத் தடுக்க வேண்டும். தாவிப் பாய்ந்து பந்தைத் தடுத்துவிட்டால் ஓ.கே... ஒருவேளை பந்து கோல்வலைக்குள் சென்றுவிட்டால்.... அவ்வளவுதான். கோல் கீப்பருக்கு வசை மழை பொழியும். இது பெனால்ட்டி கிக்கின் சுவாரஸ்யம்!
அந்த சுவாரஸ்யம் தாண்டி இதில்ஒளிந்து இருக்கும் ஒரு சைக்காலஜி தெரியுமா? பல முக்கியமான போட்டிகளில் இருந்து 286 பெனால்ட்டி கிக்குகளின் முடிவுகளை அலசினார்கள். ஒவ்வொரு தருணத்திலும் பந்து எந்தத் திசையில் உதைக்கப்பட்டது, அதற்கு கோல் கீப்பர்களின் ரியாக்‌ஷன் என்ன என்று ஆராய்ந்தனர். முடிவு ஆச்சர்யம் அளித்தது. பெரும்பாலான பெனால்ட்டி கிக் தருணங்களில் பந்து இடமோ, வலமோ பாயாமல் நேராகத்தான் உதைக்கப்பட்டு இருக்கிறது. அப்போது எல்லாம் இடமோ வலமோ பாயாமல், கோல் கீப்பர்கள் இருந்த இடத்தில் நின்றாலே, பந்து கோல் வலைக் குள் செல்லாமல் தடுத்து இருக்க முடியும். ஆனால், அப்படியான சமயங்களில் 92 சதவிகித கோல் கீப்பர்கள் ஏதோ ஒரு திசையில் பாய்ந்து கோலைக் கோட்டை விட்டு இருக்கிறார்கள். இத்தனைக்கும் அவர்கள் அனைவரும் உலகின் தலைசிறந்த கோல் கீப்பர்கள். யூகத்தில் ஏதோ ஒரு திசையில் பாய்ந்து ரிஸ்க் எடுக்காமல் இருந்த இடத்தில் இருந்தாலே பெரும்பாலான கோல்களைத் தடுத்து இருக்கலாம். ஆனால், அப்படி இருக்காமல், ஏன் பாய் கிறார்கள்?
நகராமல் நிற்கும் சமயமாகப் பார்த்து பந்து இடம்/வலமாகப் பாய்ந்து ஒருவேளை கோல் விழுந்துவிட்டால், அவ்வளவுதான். கோலி காலி. அதே அவர் வலப்புறமாகப் பாய்ந்த சமயம் பந்து இடப்புறமாகப் பாய்ந்து கோல் விழுந்தால்.. 'பாவம்.. அவனும் என்னதான் செய்வான்... நல்லாத்தான் பாய்ஞ்சு ட்ரை பண்ணான்!’ என்று உலகம் உச்சுக் கொட்டும். இதனால் தாவாமல் நடுவில் நின்றாலே பெரும்பாலான சமயம் கோல் விழாமல் தடுக்கலாம் என்று தெரிந்து இருந் தும் அதைத் தவிர்த்துப் பாய்கிறார்கள் பெரும்பாலான கோல் கீப்பர்கள். பல சூழ் நிலைகளில் நாமும் இப்படித்தான் ரியாக்ட் செய்கிறோம்.
சுற்றி இருப்பவர்கள் என்ன சொல்வார் களோ என்ற பதற்றத்திலும் தயக்கத்திலும் தவறான முடிவை எடுத்து அதைச் செயல் படுத்தி சொதப்பிவிடுகிறோம். சமயங்களில் எதுவும் செய்யாமல் இருப்பதே நாம் செய்யக்கூடிய சிறந்த செயல் என்பதை உணர்ந்தாலே, பெருமளவு சிக்கல்களில் இருந்து தப்பிவிடலாம்.
கொஞ்சம் காபி குடிக்கலாமா?  
அந்த கல்லூரிப் பேராசிரியரைப் பார்க்க அவருடைய முன்னாள் மாணவர்கள்வந்து  இருந்தார்கள். பல வருடக் கதைகளைப் பேசிச் சிரித்தவர்கள், தங்களுடைய பணி களைப் பற்றியும் அது தரும் அழுத்தம் பற்றி யும் புலம்பத் தொடங்கினார்கள். அப்போது அனைவரும் அருந்த பெரிய கேன் நிறைய காபி கொண்டுவந்தார் பேராசிரியர். ஒரு தட்டில் கண்ணாடிக் கோப்பை, பீங்கான் கோப்பை முதல் பேப்பர் கப் வரை விதவித மான காபி கோப்பைகள் இருந்தன. அனைவரும் அவரவருக்குப் பிடித்த கோப்பைகளை எடுத்துக்கொண்டு அதில் காபியை நிரப்பி அருந்துவதைப் பார்த்த பேராசிரியர் மென்மையாகப் புன்னகைத்துக்கொண்டே சொன்னார், ''தட்டில் இருந்த கோப்பைகளில் மிக விலை உயர்ந்ததும் அழகானதுமான கோப்பைகளை ஆளாளுக்குப் போட்டி போட்டு எடுத்துக்கொண்டீர்கள். மிகவும் எளிமையான கோப்பைகளை யாரும் சீண்டவே இல்லை. ஓ.கே... எதிலும் சிறப்பையே தேடுவது மனித இயல்புதான். ஆனால்,  உங்கள் தேவை இங்கே கோப்பை அல்ல; காபிதான். நீங்கள் எந்தக் கோப்பையை எடுத்தாலும், அதில் நிரப்பப் பட விருக்கும் காபி என்னவோ ஒன்றுதான்.
இங்கே நீங்கள் வாழும் வாழ்க்கை என்பது அந்த காபியைப் போன்றது. அதை ரசித்து, ருசித்து அருந்த உதவும் கோப்பைகள்தான் உங்கள் வேலை, சமூக அந்தஸ்து, செல்வச் செழிப்பு ஆகிய மற்றவை. நீங்கள் உங்கள் கோப்பைகளில் மட்டும் கவனம் செலுத்தி, காபியின் ருசியைத் தவறவிடுகிறீர்கள். காபியின் மணத்தை நாசிக்கு ஏற்றுங்கள் நண்பர்களே!''

Saturday, July 7, 2012


தமிழின் தனி அடையாளமான வட்டார வழி தமிழ்க் கட்டுரைகளை வாசிக்கும் போது கிடைத்த வார்த்தை இது. பொது தமிழில் பழமொழி. சொலவடை என்பது நாட்டார் வழக்கு. (நாட்டார் என்றவுடன் ஏதோ புது ஜாதி என்று நினைத்துவிட வேண்டாம். கிராமத்தார்கள் என்பதன் சரியான தமிழ்ச் சொல் நாட்டார்.)
சொலவடைகளை பலர் விடுகதை என்று பொருள் கொண்டுவிடுகின்றார்கள். அது தவறு. சொலவடைகள் சிந்திக்கவைத்து தெளிவுபெற வைக்கும் பழமொழிகள் என்பதே உண்மை. மேலும் சொன்னால் பழமொழிகளின் மிக சமீபத்திய சொல்லியல் வடிவம் என்று சொல்லலாம்.
பழமொழிகள் அனுபவத்தினால் சொல்லப்படுபவைகள். எனவே பழமொழிகளில் ஒரு மேதாவிதனம் இருக்கும், அத்துடன் அறிவுரை தோனியும் இருக்கும். ஆனால் சொலவடைகளில் கொஞ்சும் கவிதையும், துள்ளும் எள்ளலும் இருக்கும்.
உதாரணத்திற்கு பிறருக்கு கெடுதல் செய்ய நினைத்தால் அது உனக்கே கேடாக முடியும் என்பது அறிவுரை .
‘ வினை விதித்தவன் வினை அறுப்பான்.தினை விதைத்தவன் தினை அறுப்பான்’ இது பழமொழி.
‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்பது சொலவடை.
சில சொலவடைகள் -
நான் வியந்த சில சொலவடைகள் இங்கே தொகுத்திருக்கிறேன்.
“ குமறுன்னு இல்லாம வாக்கப்பட்டுக்கிட்டேன்
மலடுன்னு இல்லாம பிள்ளப்பெத்துக்கிட்டேன்”
“கூந்தலுள்ள சீமாட்டி கொண்டையும் போடுவா, அள்ளியும் முடியுவா”
“கோவணத்தில ஒரு காசு இருந்தா
கோழி கூப்பிட பாட்டு வரும்”
“பேச்சுப் பிடிச்ச நாயி
வேட்டைக்கு உதவாது “
“வண்ணாத்தி மூத்திரம்
தண்ணியில “
“உடுத்தச் சேல இல்லன்னு
சின்னாத்தா வீட்டுக்குப் போனா
அவ ஈச்சம்பாயக் கட்டிக்கிட்டு
எதுக்க வந்தாளாம் “
‘அரிசின்னு அள்ளிப்பார்ப்பாரும் இல்லே
உமின்னு ஊதிப்பார்ப்பாரும் இல்லே’
“ ஊசிப்போன மொச்சையிலே உழக்கு வாங்க மாட்டாதவன்
பாம்பே அல்வாயிலே பத்து டன் போடுன்னானாம்”
“எள்ளு எண்ணெய்க்குக் காயுது
எலிப்புழுக்கை எதுக்குக் காயுது”
‘கோழி களவாணிப்பய குடம் கிடைச்சா விடுவானா’
பேச்சுவழக்கில் கேளுங்கள் -
தமிழ் திரையுலகின் அடிதடி கதைகளுக்கு அடித்தளமாக அமைந்த “தமிழ்” திரைப்படத்தில் நடிகர் வடிவேலு மற்றும் நடிகை ஊர்வசியின் சொலவடைகளை கேளுங்கள்.
“புள்ளையாரே பெருச்சாளியில சவாரி செஞ்சிக்கிட்டு இருக்காரு
பூசாரிக்கு புல்லட்டு கேட்குதாம்”
“படுத்துக்கிட்டு தூங்கும் நாய்
நின்னுக்கிட்டு தூங்குமாம் பேய்”
“ஒடமரத்துல ஓநான் ஏறலாம்
பனமரத்துல பன்னி ஏறலாமா”



"வேலையும் இல்ல! வென்னி வைக்கப் பானையும் இல்ல!"
"மறைச்சுக்கட்ட மாத்துப் புடவை இல்ல"
"அன்னும் இல்ல ஆடி, இன்னும் இல்ல தீவாளி"
"அன்னைய பாடு ஆண்டுப் பாடா இருக்கு"
"அறுக்குறப்பவும் பட்டினி! பொறுக்குறப்பவும் பட்டினி!
பொங்கல் அன்னைக்கும் பட்டினி! பொழுதன்னைக்கும் பட்டினி!"
"பொங்கல் எப்பவரும்? பொருமல் ஒப்ப தீரும்?"
வாழ்வின் அவலத்தில் மிதக்கிற கண்ணீர் வார்த்தைகள்,
"எல்லாரும் ஏறி எளைச்சகுதிரை மேல
சாஸ்திரியார் ஏறி சறுக்கி வுழுந்தாராம்"
இதற்கு நேர் எதிராக ஒரு சொலவடை.
"எல்லாரும் ஏறி எளைச்ச கழுதைமேல
வண்ணான் ஏறி வையாளி பாய்ஞ்சானாம்"
(வையாளி-விரைவான பயணம்)
"அஞ்சுபணம் கொடுத்து அடிக்கச் சொன்னானாம்!
பத்துப்பணம் கொடுத்து நிறுத்தச் சொன்னானாம்"
வம்புவழக்கு வீம்பு வீராப்பு காரணமாக காவல் நிலையம், கோர்ட்படி ஏறியவர்கள் அனுபவம் போலிருக்கிற கசப்புகள்.
"உழைச்சுப்பிழைக்குறவன் ஒருகோடி
ஏச்சுப் பிழைக்குறவன் ஏழுகோடி"
"சுமந்தவன் தலையிலே பத்துச்சுமை"
ஏட்டுமொழிக் கவிதை மாதிரி நேர்ப்பொருளில் இனம் காண முடியாது, சொலவடைகளை. சொலவடைகளில் உள்ளுறைந்து கிடக்கிற சமூக அனுபவங்களைத் தாம் அடையாளம் காண முடியும்.
" குமரின்னு இல்லாம தாலிகட்டி
மலடின்னு இல்லாம புள்ள பெத்துக் கிட்டேன்"
வாழ்வின் ஏமாற்ற அறைகளை வலியுடன்
சொல்கிற ரணவரிகள்.
"உழக்குக்குள்ளே கிழக்கா மேக்கா
உருண்டுக்கிட்டு கெடக்கேன்"
குறுகலான குடும்ப வாழ்வின் கசப்பான தலையெழுத்தை கோடிட்டு காட்டுகிற வரிகள்.
எதைச் சொல்ல... எதை விடுவது என்று ஆயாசமும் மலைப்பும் வருகிறது. சொலவடைகளை அறிமுகப்படுத்தி எழுதியிருக்கும் வரிகளும் கவித்துவச் செறிவுடன் திகழ்கின்றன. வகுத்து, தொகுத்து வகைப்படுத்திய பாங்கில் தெரிகிற சமுதாய நோக்கு. சொலவடைக்கான விளக்கவரிகள் யாவும் வெளிச்சக் கவிதைகள்.
ஆதிமனிதப் புராதன அனுபவச் சங்கிலிகளின் முடிவற்ற நீளத்தை, அதன் நுனியை பிடித்து நம் மனதில் கொடுத்து முழுமையை உணர்த்திவிடுகிறது, சொலவடை.
'புழுதிக்குள் இத்தனை கவிமணமா? வியர்வைக்கு இத்தனை காவியவல்லமையா?' என்றெல்லாம் நம்மை பிரமிக்க வைக்கிறது.
ஏட்டு மொழியை மட்டுமே அறிந்திருக்கிற ஒட்டுமொத்த தமிழிலக்கியப் படைப்புகள் யாவும் இந்த நூலுக்குள் பயணப்பட்டால்... முழுமையாக செம்மைப்படும். இலக்கியப் படைப்பாளிகள் மட்டுமல்ல சகல தமிழ் வாசகத்திரளும் இந்த நூலுக்குள் பயணப்பட்டாக வேண்டும்.
சில பல சொலவடைகள் இன்னும் கொஞ்சம் கூடுதலான விவரிப்பை கோருகின்றன. இன்னும் சில சொலவடைகள் வேறு கோணத்திலான அறிமுகத்தை எதிர்நோக்குகின்றன.
வாசித்து முடித்தபிறகும் ஆறஅமர யோசிப்பதற்கும், அசைபோட்டுப் பார்ப்பதற்கும் புதிய புதிய கோணத்திலான அணுகலுக்கும் வாசலைத் திறந்து வைத்திருக்கிறது, நூல்.
பிழையேயில்லாமல் அழகான வடிவமைப்புடன் அச்சிட்ட அருவி மாலை பதிப்பகத்தை பாராட்டலாம்.

Designer Fruits


வெற்றிலையின் பலன்கள்




குழந்தைகள் சரியாகப் பால் குடிக்காத நிலையில், பிரசவித்தப் பெண்களுக்கு மார்பில் பால் கட்டிக்கொண்டு வீக்கமும் வலியும் இருக்கும். வெற்றிலையைத் தணலில் வாட்டி மார்பில் வைத்துக் கட்டிவர வீக்கமும் வலியும் குறையும். அதே சமயம், வெற்றிலையை ஆமணக்கு எண்ணெய் தடவி வாட்டி, மார்பில் வைத்துக் கட்டினால் அதிக பால் சுரக்கும்.

சிறு குழந்தைகளுக்குப் பால் மற்றும் பால் பொருட்களால் செரியாமை ஏற்படும். பத்து வெற்றிலைக் காம்பு, ஒரு வசம்பு, கால் டீஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன் ஓமம், இரண்டு பூண்டு பல், இரண்டு கிராம்பு ஆகியவற்றை மண் சட்டியில் கருக வறுத்து, ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு பாலாடை ஆகும் அளவுக்கு சுண்டக் காய்ச்சவும். இதனுடன் தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, செரியாமை நீங்கும்.

பத்து வெற்றிலைகளைச் சிறிதாக நறுக்கி, ஒரு டீஸ்பூன் பொடித்த மிளகு சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர்விட்டு அரை டம்ளர் அளவுக்கு சுண்டக் காய்ச்சி இரண்டு அல்லது மூன்று முறை குடித்துவர உணவினால் ஏற்படும் நச்சுத்தன்மை நீங்கும்.

வெற்றிலையைத் தணலில் வாட்டிச் சாறு பிழிந்து அதனுடன் சம அளவு இஞ்சிச் சாறு கலந்து தினமும் குடித்துவர நாள்பட்ட நுரையீரல் நோய்கள் குணமாகும்.

அரை டம்ளர் தேங்காய் எண்ணெயில் ஐந்து வெற்றிலைகளைப் போட்டுக் கொதிக்கவிட்டு, வெற்றிலை நன்றாகச் சிவந்ததும் எண்ணெயை வடிகட்டி பாட்டிலில் பத்திரப்படுத்தி, சொரி, சிரங்கு, படைகளின் மீது தடவிவர நல்ல பலன் கிடைக்கும்.

இரவில் படுக்கப்போகும்போது வெற்றிலையில் சிறிதளவு ஆமணக்கு எண்ணெய் தடவி, தணலில் காட்டி கட்டிகளின்மீது வைத்துக் கட்டினால், கட்டி உடைந்து சீழ் வெளிவரும்.

வெற்றிலைச் சாறுடன் சிறிது தண்ணீர் மற்றும் பாலைச் சேர்த்து அருந்திவர, சிறுநீர் நன்றாகப் பிரியும்.

கம்மாறு வெற்றிலைச் சாறுடன் வெந்நீர் கலந்து கொடுக்க வயிறு உப்புசம், மந்தம், தலைவலி, வயிற்றுவலி குணமாகும்.

சிறிது வெற்றிலைச் சாறுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து தினமும் அருந்திவர, நரம்புகள் பலப்படும்.

Friday, July 6, 2012

நிற்பாயா... ஓடுவாயா?



சம்பளம் வாங்குவதும், அதைச் செலவு செய்வதும், மீண்டும் அடுத்த சம்பளத் தேதிக்காககாத்திருப்பதும் என்று வாழ்க்கை ஒரு வட்டத்துக்கு உள்ளேயே சுழன்றுகொண்டு இருக்கிறது. 'இதுதான் சரியானப் பாதையா?’ என்ற கேள்வி அலைபோல் மனதில் மோதியபடியே உள்ளது. எப்போதும், எந்நேரமும் பிறருக்காக உழைக்க வேண்டி இருக்கிறது. நாமாகச் சுமந்தது கொஞ்சம் என்றாலும், பிறரால் சுமத்தப்படுவதுதான் அதிகம். நமது ஆசைகளை, கனவுகளை, கடந்த கால நினைவுகளை என அனைத்தையும் இந்த வாழ்க்கை தின்று தீர்க்கிறது. எப்போதும், எந்நேரமும் யாரோ ஒருவருடைய வெற்றிக்காகக் கைதட்ட வேண்டி இருக்கிறது. வேறு ஒருவரின் வெற்றியின் ருசி வலுக்கட்டாயமாக நம்முடைய புறங்கையின் மீது தடவப்படுகிறது. வேண்டாம் என்று முகம் திருப்பினாலும், 'நீ நக்கித்தான் ஆக வேண்டும்’ என்று போதிக்கப்படுகிறது. டார்கெட், அப்ரைசில், பிளான் ஆஃப் ஆக்ஷன் என்று பல்வேறு பெயர்களில் கூறப்பட்டாலும், அவை உன் கழுத்தை அழுத்தும் நுகத்தடி என்பதை மறந்துவிட வேண்டாம். அதைத் தூக்கி உன் கழுத்தில் வைத்துக் கட்டிவிட்டு, உன் பின்பக்கத்தில் நெருப் பையும் வைத்துவிடுவார்கள். நீ நின்று திரும்பிப் பார்ப்பியா? இல்ல... தலைதெறிக்க ஓடுவியா?

வசனம்

  • பள்ளியில் குழந்தையை விடும்போது மற்ற குழந்தைகளைப் பார்ப்பவள் தாய் . டீச்சர்களை பார்ப்பவன் தந்தை.
  • ஐந்து 100 ரூபாய் நோட்டுக்களை தராத நம்பிக்கையை, ஒரு 500 ரூபாய் நோட்டு தந்து விடுகிறது 
  • வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே 
  • அன்பே சிவம்'னு இருந்தவனை, கனவுல வந்தார்னு சொல்லி வம்பே சிவம்'னு மாட்டி விட்டுட்டியே ஆதீனம்.

  • இத்தனையும் தாண்டி இந்தியா எப்படித் தாக்குப் பிடிக்கப்போகிறது? இந்தியர்களின் தனி மனித உழைப்பையும் இந்த நாட்டின் ஆன்மாவில் கலந்திருக்கும் ஒருமைப்பாட்டு உணர்வையும்தான் நம்ப வேண்டி இருக்கிறது!
  • இயற்கையின் மடியில் அடிவரை சுரண்டித் தின்பது என்பதும் இன்னும் பத்து தலைமுறைக்குப் பதுக்கிவைப்பது என்பதும் அவர்கள் அறியாத நாகரிகம்.
  • ஊருக்கு போன மனைவி காலையில் திரும்பி வருகிறாள், வீட்டை சுத்தப்படுத்தினேன்:::ஆதாரங்கள் அழித்தொழிப்பு 
  • பத்திருக்கை வாங்கும் போது 'கலயாத்துக்கு வர முடியாது' எனும் நேர்மையானவனை அதிகப்ப்ரசங்கியாகவே  பார்க்கிறது 

தெம்பா சாப்பிடுங்க!


  
தினைத் தேன் உருண்டை: தினையைப் பொன்னிறத்தில் வறுத்து, மாவாக்கி அதில் கருப்பட்டி அல்லது வெல்லப்பாகு, கொஞ்சம் தேன், வாசனைக்கு ஏலக்காய் சேர்த்துப் பிசைந்து சிறுஉருண்டையாக்கினால் அற்புதமான இனிப்பு. உடலுக்கு நல்ல வலு. குழந்தைகளுக்கு உகந்தது.

கேழ்வரகுக் கூழ்: கேழ்வரகை முந்தைய நாளே முளைகட்டிவைத்து, வெயிலில் உலர்த்தி, அரைத்து மாவாக்கி, அந்த மாவைத் தண்ணீரில் கொதிக்கவைத்து இறக்கி, மோர் சேர்த்து சின்ன வெங்காயம், மல்லித் தழை தூவினால் ஊட்டச்சத்து மிக்க காலை உணவு தயார்.

கொள்ளு ரசம்: கொள்ளைக் குழைய வேகவைத்து வடிகட்டினால் கிடைக்கும் நீரில், தக்காளி, மிளகு, சீரகம் சேர்த்து வைக்கப்படும் ரசம். கொழுப்பைக் கரைக்கும்.

கறிவேப்பிலைப் பழரசம்: கறிவேப்பிலையுடன் தேங்காய் சேர்த்து, இரண்டையும் அரைத்து எடுத்த பாலில் கருப்பட்டி, ஏலக்காய் சேர்த்தால், சத்து மிக்க உடனடி பானம் தயார்.


Thursday, July 5, 2012

சத்தியம் என்பது.....

சத்தியம் என்பது நமக்குள்தான் இருக்கிறது. நாம்தான் கெடுதலுக்கு அதிகாரி. நம் எண்ணங்கள் அரக்கர்களாக உலாவர, உள்ளுக்குள்ளே இருக்கிற சத்தியத்தை ஒருமுறை தரிசித்தால் போதும். அல்லது உள்ளுக்குள் இருக்கிற சத்தியம் ஒருமுறை விழித்துக் கொண்டால் போதும்.நமக்குள் இருக்கிற அத்தனை கசடுகளும் அழிந்து ஒழிந்து விடும். இந்தச் சத்தியம் விழிப்பதுதான் ஞானம். சிவன் விழிப்பதுதான் ஞானம். சிவன் விழித்துவிட்டால், சிரித்து விட்டால், உள்ளுக்குள் இருக்கிற அத்தனை மாச்சரியங்களும் அழிந்து போகின்றன!'
- உடையார் நாவலில் பாலகுமாரன்

ஜோதி என் செட்டுதான். மனைவி.......

ஜோதி என் செட்டுதான். மனைவி குழந்தைகளுடன் திருப்பதி ட்ரிப் முடித்து வரும் வழியில் சென்னை சுற்றுலா. சாயங்காலமாக மெரினா பீச் போனார்கள். அவன் பஜ்ஜி வாங்கித் தந்தபோது அவன் மனைவியிடம் மின்னிய வெட்கம் ஒரு இன்ஸ்டன்ட் காவியம். பிள்ளைகளுக்குப் பலூன்கள் வாங்கித் தந்து, அண்ணா சமாதி, எம்.ஜி.ஆர். சமாதி காட்டி, சந்தோஷமாகத் திரும்பினார்கள். வருகிற வழியில் ‘‘ஏம் பங்காளி... ரஜினி இப்ப இங்க இருக்காப்லயா... இமயமலை போயிட்டாப் லயா..? அண்ணே... ஆட்டோ அம்மா வூட்டு வழியாப் போவுமா..? புள்ளைவோளுக்குக் காட்டுவோம்... எல்லாப் பயகளுக்கும் நாமதான மொதலாளி...’’ என நான்-ஸ்டாப்பாகப் பேசிக்கொண்டே வந்தான். 
சந்திரா பவனில் சந்தோஷமாக மசாலா பால் குடித்தார்கள். குழந்தைகளுக்கு பொம்மை போட்ட வாட்டர் பாட்டிலும் டி.வி. கவரும் வாங்கிக்கொண்டார்கள். இரவு கோயம்பேட்டில் அவர்களை பேருந்து ஏற்றிவிட்டுத் திரும்பியபோது மனசு ரொம்ப லேசாகி இருந்தது. 

அவனைப் பார்க்கும்போது எனக்கு ஆச்சர்யமாகவும் பொறாமையாகவும் இருக்கிறது. அவனுக்கு இந்த நகரம் குறித்து, வசதி வாய்ப்புகள் குறித்து, எந்தப் பிரமிப்பும் ஏக்கமும் இல்லை. யார் குறித்தும் அச்சம் இல்லை. வாழ்க்கை பற்றிய சிக்கலோ, குழப்பமோ இல்லை. குயுக்தி இல்லை. மனைவி, பிள்ளைகளை அப்படி நேசிக்கிறான். மிக எளிமையாக, சந்தோஷமாக இந்த வாழ்க்கையை அணுகுகிறான். எதையும் அடைந்துவிட வேண்டும் என்கிற வெறி இல்லை. யாரையும் புறந்தள்ளிவிடுகிற, கவிழ்த்துவிடுகிற எத்தனிப்பு இல்லை. அவனைப் போன்ற வெள்ளந்தியான, சந்தோஷமான மன அமைப்பு எனக்கு இல்லையே என்கிற வருத்தம் என்னைத் தின்கிறது. 
அவனைப் போன்ற அன்பனாய், அற்புதனாய் ஓர் புத்திசாலியால், அறிவாளியால் ஆகவே முடியாது என்பதும் உண்மைதானே!

Wednesday, July 4, 2012






இறை உணர்வின் ஆதாரம்!

ஒரு முறை, சுவாமி விவேகானந்தர் சொற் பொழிவு செய்து கொண்டிருந்தார். அப்போது, ஒருவர் எழுந்து, ''இறை உணர்வு கொள்ள வேண்டும் எனில், எதற்காக ஆலயம் செல்ல வேண்டும்? கோயிலுக்குச் செல்லாமல் இறை உணர்வை அடைய முடியாதா?'' என்று கேட்டார்.

விவேகானந்தர் பதிலேதும் கூறாமல் அவரிடம், ''குடிக்கத் தண்ணீர் கொண்டு வா'' என்றார். அவர் ஓடிச் சென்று செம்பில் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தார்.

உடனே விவேகானந்தர், ''நான் தண்ணீர்தானே கேட்டேன். கூடவே செம்பு எதற்கு?'' என்றார்.

அவர், ''சாமி! தண்ணீர் எடுத்து வர ஆதாரம் வேண்டுமல்லவா? வெறும் நீரை மட்டும் கொண்டு வர இயலாதே...'' என்றதும் விவேகானந்தர், ''அதேபோல் இறை உணர்வு கொள்ள ஆலயம் தேவை. ஆலயம் ஒரு கருவி. ஆலயமே ஆதாரம்!'' என்றார்.

- ஆர்.ஆர். பூபதி, கன்னிவாடி

வெற்றியின் ரகசியம்!

''நான் இளைஞனாக இருக்கும்போது பத்துக் காரியங்கள் செய்தால், அதில் ஒன்பது, தோல்வியில் முடிந்ததையே கண்டேன். வாழ்க்கையில் தோல்விகளை விரும்பாத நான், 'ஒன்பது முறை வெற்றி பெறுவது எப்படி?' என்று யோசித்தேன். அப்போது, எனக்கு ஓர் உண்மை புலப்பட்டது. '90 முறை முயன்றால், ஒன்பது தடவை வெற்றி கிடைக்கும்!' என்பதே அது. ஆகவே, எனது முயற்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொண்டேன்!'' - இப்படி தனது வெற்றியின் ரகசியத்தைக் கூறியவர் யார் தெரியுமா? பெர்னாட்ஷா!

- ஏ.கே.என்., திருப்பட்டினம்

முன்னேறியவனை முறைத்துப் பார்க்காதே..!

உழைப்பு உயர்வு தரும், உழைத்தால் முன்னேறலாம் என பொருளாதார முன்னேற்றத்துக்கு அடுக்கடுக்கா ஆயிரம் அறிவுரையை யார் வேண்டுமானாலும் எளிதாகச் சொல்லி விடலாம். ஆனால், அந்த முன்னேற்றத்துக்கு அவர்கள் படும் பாடு அளப்பரியது.

அது, தனக்கான முன்னேற்றமா; இல்லை இந்த சமூகத்துக்கான முன்னேற்றமா..? இல்லை தனது சமுதாயத்திற்கான முன்னேற்றமா என நினைத்து யாரும் வகுத்துப் பார்த்து உழைப்பதில்லை. ஆனால், ஒருவன் முன்னேறிவிட்டால், அந்த சமுதாயமும், சமூகமும் அவனை வாயார உயர்த்திப் பேசும். 

அப்படி ஒரு முன்னேற்றம் இன்றைக்கு ஒரு சமுதாய ரீதியாக நடைபெற்றதை நாம் எல்லோரும் அறிவோம். இதைத்தான், 'முன்னேறியவ¬க் கண்டு முறைத்துப் பார்க்காதே; அவன் முழித்திருந்த இரவுகளை நினைத்துப் பார் என்பார்கள்.