‘தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்ப மிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

– மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

Thursday, July 5, 2012

ஜோதி என் செட்டுதான். மனைவி.......

ஜோதி என் செட்டுதான். மனைவி குழந்தைகளுடன் திருப்பதி ட்ரிப் முடித்து வரும் வழியில் சென்னை சுற்றுலா. சாயங்காலமாக மெரினா பீச் போனார்கள். அவன் பஜ்ஜி வாங்கித் தந்தபோது அவன் மனைவியிடம் மின்னிய வெட்கம் ஒரு இன்ஸ்டன்ட் காவியம். பிள்ளைகளுக்குப் பலூன்கள் வாங்கித் தந்து, அண்ணா சமாதி, எம்.ஜி.ஆர். சமாதி காட்டி, சந்தோஷமாகத் திரும்பினார்கள். வருகிற வழியில் ‘‘ஏம் பங்காளி... ரஜினி இப்ப இங்க இருக்காப்லயா... இமயமலை போயிட்டாப் லயா..? அண்ணே... ஆட்டோ அம்மா வூட்டு வழியாப் போவுமா..? புள்ளைவோளுக்குக் காட்டுவோம்... எல்லாப் பயகளுக்கும் நாமதான மொதலாளி...’’ என நான்-ஸ்டாப்பாகப் பேசிக்கொண்டே வந்தான். 
சந்திரா பவனில் சந்தோஷமாக மசாலா பால் குடித்தார்கள். குழந்தைகளுக்கு பொம்மை போட்ட வாட்டர் பாட்டிலும் டி.வி. கவரும் வாங்கிக்கொண்டார்கள். இரவு கோயம்பேட்டில் அவர்களை பேருந்து ஏற்றிவிட்டுத் திரும்பியபோது மனசு ரொம்ப லேசாகி இருந்தது. 

அவனைப் பார்க்கும்போது எனக்கு ஆச்சர்யமாகவும் பொறாமையாகவும் இருக்கிறது. அவனுக்கு இந்த நகரம் குறித்து, வசதி வாய்ப்புகள் குறித்து, எந்தப் பிரமிப்பும் ஏக்கமும் இல்லை. யார் குறித்தும் அச்சம் இல்லை. வாழ்க்கை பற்றிய சிக்கலோ, குழப்பமோ இல்லை. குயுக்தி இல்லை. மனைவி, பிள்ளைகளை அப்படி நேசிக்கிறான். மிக எளிமையாக, சந்தோஷமாக இந்த வாழ்க்கையை அணுகுகிறான். எதையும் அடைந்துவிட வேண்டும் என்கிற வெறி இல்லை. யாரையும் புறந்தள்ளிவிடுகிற, கவிழ்த்துவிடுகிற எத்தனிப்பு இல்லை. அவனைப் போன்ற வெள்ளந்தியான, சந்தோஷமான மன அமைப்பு எனக்கு இல்லையே என்கிற வருத்தம் என்னைத் தின்கிறது. 
அவனைப் போன்ற அன்பனாய், அற்புதனாய் ஓர் புத்திசாலியால், அறிவாளியால் ஆகவே முடியாது என்பதும் உண்மைதானே!

No comments:

Post a Comment

What's in your mind?