‘தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்ப மிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

– மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

Saturday, July 7, 2012


தமிழின் தனி அடையாளமான வட்டார வழி தமிழ்க் கட்டுரைகளை வாசிக்கும் போது கிடைத்த வார்த்தை இது. பொது தமிழில் பழமொழி. சொலவடை என்பது நாட்டார் வழக்கு. (நாட்டார் என்றவுடன் ஏதோ புது ஜாதி என்று நினைத்துவிட வேண்டாம். கிராமத்தார்கள் என்பதன் சரியான தமிழ்ச் சொல் நாட்டார்.)
சொலவடைகளை பலர் விடுகதை என்று பொருள் கொண்டுவிடுகின்றார்கள். அது தவறு. சொலவடைகள் சிந்திக்கவைத்து தெளிவுபெற வைக்கும் பழமொழிகள் என்பதே உண்மை. மேலும் சொன்னால் பழமொழிகளின் மிக சமீபத்திய சொல்லியல் வடிவம் என்று சொல்லலாம்.
பழமொழிகள் அனுபவத்தினால் சொல்லப்படுபவைகள். எனவே பழமொழிகளில் ஒரு மேதாவிதனம் இருக்கும், அத்துடன் அறிவுரை தோனியும் இருக்கும். ஆனால் சொலவடைகளில் கொஞ்சும் கவிதையும், துள்ளும் எள்ளலும் இருக்கும்.
உதாரணத்திற்கு பிறருக்கு கெடுதல் செய்ய நினைத்தால் அது உனக்கே கேடாக முடியும் என்பது அறிவுரை .
‘ வினை விதித்தவன் வினை அறுப்பான்.தினை விதைத்தவன் தினை அறுப்பான்’ இது பழமொழி.
‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்பது சொலவடை.
சில சொலவடைகள் -
நான் வியந்த சில சொலவடைகள் இங்கே தொகுத்திருக்கிறேன்.
“ குமறுன்னு இல்லாம வாக்கப்பட்டுக்கிட்டேன்
மலடுன்னு இல்லாம பிள்ளப்பெத்துக்கிட்டேன்”
“கூந்தலுள்ள சீமாட்டி கொண்டையும் போடுவா, அள்ளியும் முடியுவா”
“கோவணத்தில ஒரு காசு இருந்தா
கோழி கூப்பிட பாட்டு வரும்”
“பேச்சுப் பிடிச்ச நாயி
வேட்டைக்கு உதவாது “
“வண்ணாத்தி மூத்திரம்
தண்ணியில “
“உடுத்தச் சேல இல்லன்னு
சின்னாத்தா வீட்டுக்குப் போனா
அவ ஈச்சம்பாயக் கட்டிக்கிட்டு
எதுக்க வந்தாளாம் “
‘அரிசின்னு அள்ளிப்பார்ப்பாரும் இல்லே
உமின்னு ஊதிப்பார்ப்பாரும் இல்லே’
“ ஊசிப்போன மொச்சையிலே உழக்கு வாங்க மாட்டாதவன்
பாம்பே அல்வாயிலே பத்து டன் போடுன்னானாம்”
“எள்ளு எண்ணெய்க்குக் காயுது
எலிப்புழுக்கை எதுக்குக் காயுது”
‘கோழி களவாணிப்பய குடம் கிடைச்சா விடுவானா’
பேச்சுவழக்கில் கேளுங்கள் -
தமிழ் திரையுலகின் அடிதடி கதைகளுக்கு அடித்தளமாக அமைந்த “தமிழ்” திரைப்படத்தில் நடிகர் வடிவேலு மற்றும் நடிகை ஊர்வசியின் சொலவடைகளை கேளுங்கள்.
“புள்ளையாரே பெருச்சாளியில சவாரி செஞ்சிக்கிட்டு இருக்காரு
பூசாரிக்கு புல்லட்டு கேட்குதாம்”
“படுத்துக்கிட்டு தூங்கும் நாய்
நின்னுக்கிட்டு தூங்குமாம் பேய்”
“ஒடமரத்துல ஓநான் ஏறலாம்
பனமரத்துல பன்னி ஏறலாமா”



"வேலையும் இல்ல! வென்னி வைக்கப் பானையும் இல்ல!"
"மறைச்சுக்கட்ட மாத்துப் புடவை இல்ல"
"அன்னும் இல்ல ஆடி, இன்னும் இல்ல தீவாளி"
"அன்னைய பாடு ஆண்டுப் பாடா இருக்கு"
"அறுக்குறப்பவும் பட்டினி! பொறுக்குறப்பவும் பட்டினி!
பொங்கல் அன்னைக்கும் பட்டினி! பொழுதன்னைக்கும் பட்டினி!"
"பொங்கல் எப்பவரும்? பொருமல் ஒப்ப தீரும்?"
வாழ்வின் அவலத்தில் மிதக்கிற கண்ணீர் வார்த்தைகள்,
"எல்லாரும் ஏறி எளைச்சகுதிரை மேல
சாஸ்திரியார் ஏறி சறுக்கி வுழுந்தாராம்"
இதற்கு நேர் எதிராக ஒரு சொலவடை.
"எல்லாரும் ஏறி எளைச்ச கழுதைமேல
வண்ணான் ஏறி வையாளி பாய்ஞ்சானாம்"
(வையாளி-விரைவான பயணம்)
"அஞ்சுபணம் கொடுத்து அடிக்கச் சொன்னானாம்!
பத்துப்பணம் கொடுத்து நிறுத்தச் சொன்னானாம்"
வம்புவழக்கு வீம்பு வீராப்பு காரணமாக காவல் நிலையம், கோர்ட்படி ஏறியவர்கள் அனுபவம் போலிருக்கிற கசப்புகள்.
"உழைச்சுப்பிழைக்குறவன் ஒருகோடி
ஏச்சுப் பிழைக்குறவன் ஏழுகோடி"
"சுமந்தவன் தலையிலே பத்துச்சுமை"
ஏட்டுமொழிக் கவிதை மாதிரி நேர்ப்பொருளில் இனம் காண முடியாது, சொலவடைகளை. சொலவடைகளில் உள்ளுறைந்து கிடக்கிற சமூக அனுபவங்களைத் தாம் அடையாளம் காண முடியும்.
" குமரின்னு இல்லாம தாலிகட்டி
மலடின்னு இல்லாம புள்ள பெத்துக் கிட்டேன்"
வாழ்வின் ஏமாற்ற அறைகளை வலியுடன்
சொல்கிற ரணவரிகள்.
"உழக்குக்குள்ளே கிழக்கா மேக்கா
உருண்டுக்கிட்டு கெடக்கேன்"
குறுகலான குடும்ப வாழ்வின் கசப்பான தலையெழுத்தை கோடிட்டு காட்டுகிற வரிகள்.
எதைச் சொல்ல... எதை விடுவது என்று ஆயாசமும் மலைப்பும் வருகிறது. சொலவடைகளை அறிமுகப்படுத்தி எழுதியிருக்கும் வரிகளும் கவித்துவச் செறிவுடன் திகழ்கின்றன. வகுத்து, தொகுத்து வகைப்படுத்திய பாங்கில் தெரிகிற சமுதாய நோக்கு. சொலவடைக்கான விளக்கவரிகள் யாவும் வெளிச்சக் கவிதைகள்.
ஆதிமனிதப் புராதன அனுபவச் சங்கிலிகளின் முடிவற்ற நீளத்தை, அதன் நுனியை பிடித்து நம் மனதில் கொடுத்து முழுமையை உணர்த்திவிடுகிறது, சொலவடை.
'புழுதிக்குள் இத்தனை கவிமணமா? வியர்வைக்கு இத்தனை காவியவல்லமையா?' என்றெல்லாம் நம்மை பிரமிக்க வைக்கிறது.
ஏட்டு மொழியை மட்டுமே அறிந்திருக்கிற ஒட்டுமொத்த தமிழிலக்கியப் படைப்புகள் யாவும் இந்த நூலுக்குள் பயணப்பட்டால்... முழுமையாக செம்மைப்படும். இலக்கியப் படைப்பாளிகள் மட்டுமல்ல சகல தமிழ் வாசகத்திரளும் இந்த நூலுக்குள் பயணப்பட்டாக வேண்டும்.
சில பல சொலவடைகள் இன்னும் கொஞ்சம் கூடுதலான விவரிப்பை கோருகின்றன. இன்னும் சில சொலவடைகள் வேறு கோணத்திலான அறிமுகத்தை எதிர்நோக்குகின்றன.
வாசித்து முடித்தபிறகும் ஆறஅமர யோசிப்பதற்கும், அசைபோட்டுப் பார்ப்பதற்கும் புதிய புதிய கோணத்திலான அணுகலுக்கும் வாசலைத் திறந்து வைத்திருக்கிறது, நூல்.
பிழையேயில்லாமல் அழகான வடிவமைப்புடன் அச்சிட்ட அருவி மாலை பதிப்பகத்தை பாராட்டலாம்.

No comments:

Post a Comment

What's in your mind?