‘தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்ப மிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

– மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

Friday, July 6, 2012

நிற்பாயா... ஓடுவாயா?



சம்பளம் வாங்குவதும், அதைச் செலவு செய்வதும், மீண்டும் அடுத்த சம்பளத் தேதிக்காககாத்திருப்பதும் என்று வாழ்க்கை ஒரு வட்டத்துக்கு உள்ளேயே சுழன்றுகொண்டு இருக்கிறது. 'இதுதான் சரியானப் பாதையா?’ என்ற கேள்வி அலைபோல் மனதில் மோதியபடியே உள்ளது. எப்போதும், எந்நேரமும் பிறருக்காக உழைக்க வேண்டி இருக்கிறது. நாமாகச் சுமந்தது கொஞ்சம் என்றாலும், பிறரால் சுமத்தப்படுவதுதான் அதிகம். நமது ஆசைகளை, கனவுகளை, கடந்த கால நினைவுகளை என அனைத்தையும் இந்த வாழ்க்கை தின்று தீர்க்கிறது. எப்போதும், எந்நேரமும் யாரோ ஒருவருடைய வெற்றிக்காகக் கைதட்ட வேண்டி இருக்கிறது. வேறு ஒருவரின் வெற்றியின் ருசி வலுக்கட்டாயமாக நம்முடைய புறங்கையின் மீது தடவப்படுகிறது. வேண்டாம் என்று முகம் திருப்பினாலும், 'நீ நக்கித்தான் ஆக வேண்டும்’ என்று போதிக்கப்படுகிறது. டார்கெட், அப்ரைசில், பிளான் ஆஃப் ஆக்ஷன் என்று பல்வேறு பெயர்களில் கூறப்பட்டாலும், அவை உன் கழுத்தை அழுத்தும் நுகத்தடி என்பதை மறந்துவிட வேண்டாம். அதைத் தூக்கி உன் கழுத்தில் வைத்துக் கட்டிவிட்டு, உன் பின்பக்கத்தில் நெருப் பையும் வைத்துவிடுவார்கள். நீ நின்று திரும்பிப் பார்ப்பியா? இல்ல... தலைதெறிக்க ஓடுவியா?

No comments:

Post a Comment

What's in your mind?