‘தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்ப மிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

– மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

Wednesday, June 3, 2015

Nanayam Vikatan 26/4/2015
சேமிப்பும் முதலீடும்... உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்!
இந்தியர்கள் பொதுவாகவே சேமிக்கும் பழக்கத்தை இயல்பாகக் கொண்டவர்கள். இந்த சேமிக்கும் பழக்கம் ஒருவரை பாதிப்பிலிருந்து நிச்சயம் காப்பாற்றும் என்றாலும் இதுவே ஒருவரை பெரும் பணக்காரராக உயர்த்திவிடாது. இந்தியாவில் நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்களே அதிகம் என்பதால், அவர்கள் தங்கள் நிலையை உயர்த்திக்கொள்ள சேமிக்கும் பழக்கத்தில் இருந்து முதலீடு செய்யும் பழக்கத்துக்கு மாறவேண்டும். சேமிப்பும் முதலீடும் ஒன்று என பலரும் நினைக்கிறார்கள். ஆனால், இந்த இரண்டுக்கும் சில வித்தியாசங்கள் உண்டு.



சேமிப்பு என்பது செலவுகள் போக மீதி உள்ளதை பிற்காலத் தேவைக்காக எடுத்து வைப்பது.  உதாரணமாக, உண்டியலில் போடும் பணம் என்றைக்கும் வளராது. நாம் சிறுக சிறுக சேமிக்கும் பணம் அப்படியே இருக்கும். சிறிது காலம் கழித்து விலைவாசி ஏற்றத்தோடு ஒப்பிடும்போது, அதன் மதிப்பு வெகுவாகக் குறைந்திருக்கும்.

உதாரணமாக, ஒருவர் ஒரு வங்கியில் ஒரு லட்சம் ரூபாயை எஃப்டியில் சேமித்து வைக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இதற்கு 7% வட்டி கிடைக்கிறது. அதேநேரத்தில், அந்த ஆண்டில் பணவீக்க விகிதம் 7% என்று வைத்துக்கொண்டால், வட்டி மூலம் கிடைக்கும் லாபம் பணவீக்கத்துக்கே சரியாகப் போய்விடும். இதனால் எந்த லாபமும் கிடைக்காது. நமது சேமிப்பானது பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் தந்தால் மட்டுமே நமக்கு லாபம் கிடைக்கும்.

ஆனால், முதலீடு என்பது  நீண்ட காலத்தில் பணவீக்கத்தைத் தாண்டிய வருமானத்தைத் தரவல்லது. உதாரணமாக, ஒருவர் மியூச்சுவல் ஃபண்டில் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்தாலோ அல்லது எஸ்.ஐ.பி. முறையின் மூலம் நீண்ட காலத்துக்கு தொடர்ந்து முதலீடு செய்து வந்தாலோ 12 முதல் 15% கூட்டு வட்டியில் வருமானம் வளரும். உடனடித் தேவைக்கு சார்ட் டேர்ம் ஃபண்டுகளான லிக்விட் ஃபண்டுகளில் முதலீடு செய்ய லாம். இதற்கு 8% முதல் 9% வரை வருமானம் கிடைக்கும்.

நம்மில் பல பேர் கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தில் போட்டு வைக்கிறார்கள். இன்னும் சிலர் இன்ஷூரன்ஸை முதலீடாக நினைத்து காப்பீடு பாலிசிகளுக்கு பிரீமியம் கட்டி வருகிறார்கள். இன்ஷூரன்ஸ் என்பது முதலீ்டு அல்ல. அது நம் வாழ்க்கைக்கான பாதுகாப்பு மட்டுமே. ஒருவர் எண்டோவ்மென்ட் பாலிசிகளை எடுப்பதைக் காட்டிலும் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதன் மூலம் குறைந்த பிரிமீயத்தில் அதிக  இன்ஷூரன்ஸ் கவரேஜை பெறமுடியும்.

இன்ஷூரன்ஸ், வங்கி எஃப்டி. போன்ற பழமையான முதலீட்டு முறைகளில் சேமிப்பதைவிட மியூச்சுவல் ஃபண்டுகளில் 15 - 20 ஆண்டு காலத்தில் முதலீடு செய்வது அதிக வருமானத்தைப் பெறுவதற்கான புத்திசாலித்தனமான வழியாகும். ஆனால், நம்மில் பலரும் மியூச்சுவல் ஃபண்ட் என்றாலே அதை அரசாங்கம் நடத்துகிறதா அல்லது தனியார் நடத்து கிறதா என்று கேட்கிறார்கள். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை அரசாங்கமே நேரடியாக நடத்துவ தில்லை என்றாலும் அரசின் கண்காணிப்பு மிக அதிகமாக இருப்பதால், இந்த ஃபண்ட் நிறுவனங்கள் திவால் ஆகிவிட வாய்ப்பே இல்லை.



இந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை நிர்வகிக்க என தனியாக ஃபண்ட் மேனேஜர்கள் இருக்கிறார்கள். ஒரு நல்ல நிதி ஆலோசகர் மூலம் மியூச்சுவல் ஃபண்டைத் தேர்வு செய்யும்போது நம் முதலீட்டு ரிஸ்க் வெகுவாகக் குறைந்துவிட வாய்ப்புள்ளது. தவிர, நம் முதலீடு நாம் எதிர்பார்த்த மாதிரி வளர்கிறதா, இல்லையா என்பதையும் எப்போது வேண்டுமானாலும் நம்மால் சோதித்துப் பார்த்துக் கொள்ள முடியும்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பங்குச் சந்தை சார்ந்தது என்பதால், அதில் ரிஸ்க்கே இல்லை என்று சொல்ல முடியாது என்றாலும், பிஎஸ்இ-ன் குறியீடான சென்செக்ஸ் ஆரம்பித்த ஆண்டு 1979 நாள் முதல் இன்று வரையிலான அதன் வளர்ச்சியை 10 ஆண்டுகளாக பிரித்துப் பார்த்தால், ஒவ்வொரு பத்தாண்டிலும் அது 6 மடங்கு வளர்ச்சி கண்டு இருக்கிறது. இனிவரும் காலத்தில் இந்தியப் பொருளாதாரம் இன்னும் வேகமான வளர்ச்சியைக் காணும் என்பதால் மியூச்சுவல் ஃபண்டில்  முதலீடு செய்வதற்கு இது சரியான தருணம்தான்.



நாம் செய்யும் முதலீடு எதுவாக இருந்தாலும் அதன்மூலம் கிடைக்கும் வட்டி அல்லது வருமானம், வரிச் சலுகை ஏதும் உண்டா, முதிர்வுத் தொகைக்கு வரி ஏதாவது கட்டவேண்டுமா என்பதை  மேலே அட்டவணையாகத் தந்திருக்கிறேன். இந்த அட்டவணையைப் பார்த்து, உங்கள் முதலீடு இனி எப்படிப் பட்டதாக இருக்கவேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை உங்கள் உங்கள் கையில்தான். உங்கள் முதலீடு நல்ல லாபம் தருகிற மாதிரி அமைந்தால், உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்குமே!

No comments:

Post a Comment

What's in your mind?