‘தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்ப மிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

– மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

Tuesday, March 31, 2020

நினைவலைகள் பகுதி 2 - டேவிட் ரிச்சர்ட் பிரான்சிஸ்

டேவிட் ரிச்சர்ட் பிரான்சிஸ், நண்பன். ஆங்கிலோ இந்தியன், சென்னைவாசி , தமிழ் கொஞ்சம் தெரியும். கிராம மற்றும் சிறு நகர வாழ்க்கை வாழ்ந்த என்னை உலகமயமாக்கலுக்கு தயார் படுத்திய ஆசான். அனிமேஷன் துறையின் ஆசிரியன். வயதில் எனக்கு சிறியவன் ஆனால் உலகச் சிந்தனையில் எனக்கு சுவாமிமலை முருகன். அவன் என்னவாக இருந்தாலும் என்னை அழைப்பது "தலைவா".


அவனது அறையின் கதவுகளை மெல்லத் திறந்தால் சிங்கப்பூரின் வானொலி GOLD CLASS 90.5 டெணான் செட்டில் அறை முழுதும் நிரம்பி வழியும். டெணான் மற்றும் நாக்காமிச்சி வகை ஆடியோ மார்க்கெட்டை பற்றி பேசுவோம். பாப் மார்லி, பீட்டில்ஸ், எல்விஸ் பிரெஷ்லி அனைவரும் பாடல் வழியாக அறைக்குள் வந்து செல்வார்கள். மேற்கத்திய இசையை மெல்ல அறிமுகப்படுத்தியவன். ஆனால் என்னால் இளையராஜா என்னும் தேனில் விழுந்து மயங்கி கிடந்தேன் தெளியவில்லை இன்று வரை. அவன் ஓரு   இசைஞன்!

ஒரு நாள் மாலை, டிக்கெட் கிடைத்திருக்கிறது, "தயாராக இரு,  மாலை இசை நிகழ்ச்சிக்கு போகவேண்டும், உலக இசையை அனுபவிக்க போகிறாய்" என்றான். எஸ்பிளநெட் அரங்கின் பெரும் கூட்டத்தில் முதல் வரிசையில் இருவரும் அமர்திருந்தோம். மிக உயர்தர மக்கள் அமரும் இடம் எனப் பின்னர்தான் உணர்ந்தேன்.விளக்கு ஒளிர்ந்தது, மேடையில் ஒய்யாரமாய் பெண் மற்றும் பியானோ ஒன்றும் இருந்தது, மைக் இல்லை. இத்தாலியப் பெண் பாட ஆரம்பித்தால். இரு காதுகளுக்கு இடையே அலுமினியத் திரவம் சலனமில்லாமல் ஓடிக்கொண்டிருந்தது. இந்த பிறவியை இளையராஜாவோடு மட்டும் முடித்துக் கொள்ளலாம் எனத் தீரமானித்த நேரம் அது.

ஓரு நாள் தயாராக இரு, மலேசியா செல்வோம் என்றான். அங்கிருந்து முப்பது நிமிடப் பயணம். தயாரானேன். "இன்று அந்த நாட்டில் காசில்லாமல் பயணிப்போம்" என்றான். பயண அட்டையை காண்பித்து ஜோஹோர் பாரு சென்றடைந்தோம். அங்கிருந்து சைக்கிள், நடை, பிக் அப் வண்டிகள்,  விலையில்லா கார் மற்றும் பேருந்து பயணம் செய்து பல மாறுபட்ட மனிதர்களை சந்தித்து,  எம்பது கிலோ மீட்டர் தொலைவில் இருந்த டேசாறு கடற்கரையை அடைந்தோம். கடற்கரையில் களைப்பு தீர படுத்து உறங்கினோம். அங்கு வந்த இந்திய நண்பர்களிடம் பேச்சு கொடுத்தோம், உணவு தந்தார்கள்!. உண்டு முடித்து பக்கத்தில் இருந்த டேசாரு படகுத் துறைக்கு சென்றோம். கையில் இருந்த வெள்ளி மோதிரத்தை கழற்றிக் கொடுத்து சிங்கப்பூர் வந்தடைந்தோம். விலையில்லா பயணம் எவ்வளவு அனுபவமாக மாறும் என உணர்ந்தேன்.



எனது பெரும்பாலான சிங்கப்பூரின் சனிக்கிழமை இரவுகள், பல நாட்டு நபர்களுடனான உரையாடல்களாக இருக்கும். பெரும்பாலும் அனைவரும் இரவு ஏழு மணிக்கு பேச்சலர் வீட்டில்(பெரும்பாலும் டேவிட் வீட்டில் )ஒன்று கூடுவோம். பல நாட்டு மது வகைகள் மேசையில் நிரம்பி இருக்கும், பார்ட்டி ஸ்னாக்ஸ் என்னும் கடலை , பாதாம், பிஸ்தா, சிப்ஸ் வகைகளும் இருக்கும். தனக்கு தெரிந்த ஏதோ உணவு ஒன்றும் வீட்டில் இருந்து எடுத்து வருவார்கள். இரவு எட்டு மணிக்கு உணவுக்கு தயாராவோம், சில பல நலம் விசாரிப்புகளுக்கு பிறகு களம் தயாராகும்.

எகிப்தியன், அமெரிக்கர்கள், ஸ்காட்லாந்து, பாகிஸ்தான், இந்தியர்கள் மற்றும் ஆஸ்திரேலியர்கள் அனைவரும் இருப்போம். டேவிட் உரையை ஆரம்பிப்பான். உரையாடல்களில் மலைவாழ் இன மங்கோலியர்கள் மொகலாயர்களாக மாறியது எப்படி, கொலம்பிய ELN குழுவினைப்பற்றிய தாக்கம், ஆப்கானியர்களின் ரத்த வரலாறு, வூடி ஆலன் படங்கள், கம்யூனிஸ்டுகள், வட கொரிய மக்களின் வாழ்க்கை முறை, வியட்நாம் போரில் அமெரிக்கர்கள், கிவி மற்றும் மோரி இனத்தவர்கள், மொசாத்'தின் ஆபரேஷன் என்டபே(The last king of Scotland climax describe this), சாமர்கண்டில் தாஜ்மஹால் வந்தது எப்படி எனப் பலவாக உரையாடல் தொடரும். முடிவில், அனைவரும் தாக சாந்தி தனித்து உரையாற்றி கண் மூடி, நடு நிசிப் பேய்கள் வந்து போன நேரமாய் தரையில் படுத்து துயில்வோம். பார்ப்பதற்கு ஐ நா சபை கலைந்து சரிந்து துயில்வதைகக் காண முடியும்.

ஷான்(பாகிஸ்தானிய நண்பன்), நான் மற்றும் டேவிட் மூவரும்(சங்கர், சலீம்,சைமன்) சேர்ந்த சனிக்கிழமை இரவுகள் தனிக் கதை, பெஷாவரில் ஆரம்பித்து, பாஸ்டோ பாஷை  பேசி, பெஷாவர் சென்று திருநெல்வேலி விவசாயத்தில் முடிப்போம். எங்கள் மூவரையும் இனைக்கும் ஒற்றைப் புள்ளி "நாம் படைப்பாளி" என்பது மட்டுமே.

அவனுக்கு ஓரு வினோத பழக்கம் இருந்தது, அவனுக்கு கோபம் வந்தால், செய்யும் வேலையை மறுபடியும் செய்ய ஆரம்பித்து விடுவான்.  ஒரு நாள் மாலை இருவரும் புக்கிட் டிமா மலையில்(Bukit Timah nature reserve trail) ஓரு நடைப்பயணம் சென்றோம். அடிக்கடி செல்வதுண்டு, உடல் திடமாக இருக்கிறதா என அடிக்கடி உறுதி செய்வதற்காக. அதை முடித்த ஓரு நாள் அப்பர் புக்கிட் டிமா ரோட்டில் நடக்க ஆரம்பித்து புக்கிட் பஞ்சாங் சென்று காரூசில்(Indian Restaurant) இரவு உணவிற்காக செல்லும்போது மணி 9.30 PM இருக்கும், இருவருக்குமே காதடைத்தது பசி உச்சத்தில் இருந்தது. அந்த உணவகத்தில் இலையில் பரிமாறுவார்கள். முதலில் பிரியாணி வரும் அதில் சாம்பார் ஊற்றி சாப்பிடவேண்டும், வினோதம் தான் ஆனால் அதில் சுவையிருக்கும். பின்பு ரசம் முடித்து தயிர் சென்று முடிக்கும் போது இரவு 10.30 PM இருக்கும், பரிமாறியவர் மெல்ல அருகில் வந்து டைம் ஆச்சு கடை மூட வேண்டும் என்றார். டேவிட்டுக்கு கோபம் வந்தது. அவரிடம் "பிரியாணியும் சாம்பாரும் எடுத்து வாருங்கள்" என்றான்.  

ஈவேரா,மார்டின் லூதர் கிங், குஷ்வந்த் சிங், எனது குரு சுஜாதா, ராபின் வில்லியம்ஸ், வின்ஸ்டன் சர்ச்சில், வூடி ஆலன் இவர்கள் யாருடனும் பழகியதில்லை ஆனால் டேவிட்டுடன் பேசியிருக்கிறேன் பழகியிருக்கிறேன் அது போதும்.





No comments:

Post a Comment

What's in your mind?